சனி, 18 பிப்ரவரி, 2012

விலங்குப் பண்ணை

இந்த முறை விடுமுறைக்கு சென்ற போது வாங்கியது இந்தப் புத்தகம். எழுவது வருடங்களுக்கு முன்பு வெளியான நாவல் இது. அதனை சுவை மாறாமல் தமிழில் தந்து உள்ளார் திரு பி வி ராமசாமி அவர்கள். 

பொன்னுலகத்தை எதிர் நோக்கும் மனிதர்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றத்தையே சந்திக்கும் அவல நிலையை அற்புதமாக எடுத்துக் காட்டும் நூல் இது. இன்றும் இந்த நிலைமை மாறவே இல்லை என்பது தான் இன்னும் நூலை வாசிக்கும் போது நெஞ்சை அறுக்கும் உண்மை. 

எல்லா அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மக்களை எப்படி சுரண்டுகிறார்கள் என்பதனை அற்புதமாக எடுத்துக் காட்டுவது இந்த நூலின் சிறப்பு. 

இந்த நூலின் சுருக்கப் பட்ட ஒரு தமிழ் வடிவத்தை மஞ்சரி பத்திரிகை வழங்கியது என்று ஞாபகம். அதன் பின்னர் இதன் ஆங்கில வடிவத்தை நூலகத்தில் கல்லூரி நாட்களில் படித்தது. 



திடீர் என்று ஆரம்பிக்கும் புரட்சி, அதன் பின்னர் எல்லா மிருகங்களும் சேர்ந்து பணி செய்வது, அங்கே ஆரம்பிக்கும் அதிகார துஸ்பிரயோகம், பன்றிகள் பிற மிருகங்களை வேலை வாங்குவது, அதற்க்கு துணையாக வேட்டை நாய்கள், எல்லா மிருகங்களும் சமம், பன்றிகள் கொஞ்சம் மேலே என்று மாறுதல், மூல நூலின் ஆன்மா கெடாமல் மொழி பெயர்ப்பு செய்யப் பட்டு உள்ளது.

இதன் மொழி பெயர்ப்பாளர் திரு ராமசாமி அவர்கள் எனது தகப்பனாரின் நண்பர்.   எனக்கு முப்பது ஆண்டுகளாக எனக்குப் பழக்கமானவர். கோத்ரேஜ் நிறுவனத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் பணி செய்து ஒய்வு பெற்றவர். இது தான் இவரது முதல் மொழி பெயர்ப்பு. கடினமான, கரடு முரடான வார்த்தைகள் இல்லாமல் மிக எளிதாக படிக்கும் வகையில் மொழி பெயர்ப்பு செய்து உள்ளார். 

அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.