வெள்ளி, 28 மார்ச், 2014

கடவுள் - கற்பிதமா, கற்பனையா ?


பல்லாயிரம் ஆணடுகளுக்கு முன்னால் மனித இனம் குரங்கு இனத்தில் இருந்து பிரிய ஆரம்பித்தது. வளைந்த இருந்த முதுகுத் தண்டு நிமிர மனிதன் நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தான். ஆனால் அப்போது அவன் முன்னால் ஒரு பெரும் சவால் காத்து இருந்தது.

மனிதனுக்கு புலியைப் போலவோ, சிங்கத்தைப் போலவோ வலுவான் உடல் அமைப்பு இல்லை, மானைப் போல அவனால் விரைவாக ஓட முடியவில்லை. இந்தக் குறைகளை சமன் செய்ய அவன் ஆயுதங்களைச் செய்து கொள்ளத் தொடங்கினான், கூடி வாழத் தொடங்கினான். சமுதாய முறை என்பது உருவானது.

ஆனால் மனிதன் மிருகங்களிடம் இருந்தே பாடம் படித்துக் கொண்டு இருந்தான். மிருக உலகில் வலிமையானதே பிழைக்கும். வேட்டை ஆடிய உணவை வலிமை மிகுந்த மிருகம் உண்ட பின்னே மற்றவைகள் உண்ண முடியும்.

அதனால் தான் Lion's Share ( சிங்கத்தின் பங்கு) என்ற சொல்லாட்சியே உள்ளது. பெண் சிங்கம் வேட்டையாடிக் கொண்டு வந்ததை ஆண் சிங்கம் உண்ட பின் தான் பெண் சிங்கத்திற்கும் குட்டிகளுக்கும் கிடைக்கும்.

யானைக் கூட்டத்தில் மட்டும் இது மாறுபடும். யானைகள் பயணம் செய்யும் போது, நீரோ அல்லது உணவோ கிடைத்தால் முதலில் கரு உற்ற பிடிகள், பின் மற்ற பெண்யானைகள், பின் முடிய யானைகள், அதன் பிறகு இளைய வயதில் உள்ள யானைகள், எல்லாம் உண்டு முடித்த பின்னர் தலைமைப் பொறுப்பில் இருக்கும் யானை உண்ணும்.

கூட்டு வாழ்க்கைக்கு, சமுதாய வாழ்க்கைக்கு மனிதன் தயாராகும் போது, பிறரைக் காக்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு வந்து சேர்ந்தது. வலிமை குறைந்தவர்களை, காயம் அடைந்தவர்களை, முதியவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மற்றவர்கள் சுமக்க வேண்டி வந்தது.

தனது சுகங்களைக் குறைத்துக் கொண்டு அல்லது பின்னிறுத்தி, பிறர் வாழ நினைக்கும், செய்யும் செயல்கள் அறம் எனப் பேசப் படத் தொடங்கின. இதனைச் சரிவர செய்பவர்களை பரிசுகள் வழங்கிக்கும், தவறுபவர்களுக்கு தண்டனை தரும் வழக்கமும் ஆரம்பமாகியது.

பரிசுகளை விரும்பியோ அல்லது தண்டனைக்கு அஞ்சியோ இந்த முறையில் வாழ மனிதர்கள் ஆரம்பித்தார்கள். குழுக்கள் ஒன்றாகி, காலமாற்றத்தில் அரசு முறைகள் உருவாக ஆரம்பித்தன.

எது சரி, எது தவறு என்று வரையறை செய்யும் மனிதர்கள், இந்த ஒழுங்கைக் மக்கள் கடைபிடிக்கிறார்களா என்று கண்காணிக்கும் அதிகாரிகள், தவறு நடந்தது என்று தெரிந்தால் அதற்க்கான தண்டனையை வழங்கும் ஆட்கள் என்று சமுதாயம் விரிவாகத் தொடங்கியது. இதுதான் நாம் இப்போது படிக்கும் நாகரீகத்தின் தொடக்கமாக இருக்க முடியும்.

ஆனால் மனித மனம் மிக விசித்திரமானது, அது மீண்டும் மீண்டும் தன்னலனையே நாடுவது, பிறர் அறியாமல் தவறு செய்தால் என்ன என்ன கேள்வியை அது கேட்க ஆரம்பித்தது. எல்லார் பின்னாலும் காவலுக்கு ஆள் வைக்க முடியுமா என்ன ? இந்தக் காவலனே தவறு செய்தால் என்ன செய்ய என்ற பிரச்னை சமுதாயத்தின் முன் எழுந்தது.

இதனைச் சரி செய்ய ஆண்டவன் என்ற சித்தாந்தம் பதிலானது. எல்லாம் தெரிந்தவன், எங்கும் இருப்பவன், காலங்களைக் கடந்தவன், எல்லோர் செய்யும் செயல்களையும் சாட்சி மாத்திரமாக பார்ப்பவன் ஒருவன் இருக்கிறன், அவனிடம் எதையும் மறைக்க முடியாது என்று பேச்சு ஆரம்பமானது.

இது ஒரு பார்வை.

படைக்கப் பட்ட ஒரு பொருள் இருக்கும் என்றால் அதனைப் படைத்தவன் ஒருவன் இருந்தே தீர வேண்டும். மேசை இருக்கிறது என்றால் அதனைச் செய்த தச்சன் ஒருவன் இருக்க வேண்டும், ஆடை இருக்கிறது என்றால் அதனை நெய்த நெசவாளி ஒருவன் இருக்க வேண்டும், அது போல ஒரு ஒழுங்கின் மீது உலகம் இயங்குகிறது என்றால் அதனை உருவாகிய ஒருவன் இருக்கத்தான் வேண்டும் என்பது மற்றொரு பார்வை.

ஏதாவது ஓன்று உருவாக வேண்டும் என்றால் அதற்கான காரணப் பொருள் ஓன்று இருக்கத் தான் வேண்டும், காரணம் இல்லாமல் காரியம் இல்லை. பெருவெடிப்பின் மூலமாக உலகம் தோன்றியது என்றால் அதன் முன் என்ன இருந்தது, ஏன் அந்த வெடிப்பு நடந்தது என்ற கேள்விகளுக்கு இதுவரை விடை இல்லை.

எதோ ஒரு ஒழுங்கில் உலகம் நடக்கிறது என்றால் அது எப்படி சமன் செய்யப் பட்டது, இதற்கெல்லாம் ஒரு மூல காரணப் பொருள் ஓன்று இல்லாமல் நடக்கவே முடியாது. அதுவே இறைவன் என்று மற்றொரு பார்வை பேசுகிறது.

விடை காண முடியாத பல கேள்விகள் இன்னும் நம் முன்னால் இருக்கின்றன - நமது அறிவை கேலிக்குறியாகும் கேள்விகள். இதற்க்கு பதில் அளிக்க முடியவில்லை என்பதால் தான் வள்ளுவன் கூட


                    அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
                    கேடும் நினைக்கப் படும். 

இதற்க்கு உரை எழுதும் பரிமேலழகர் கோட்டத்தினைப் பொருந்தியவனைப் பொருந்திய மனத்தை உடையவனது ஆக்கமும்;ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின் அவை ஆராயப்படும்

 உரை விளக்கம்
'கோட்டம்', ஈண்டு அழுக்காறு. 'உளவாயின்' என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால் இதற்கு ஏதுவாகிய பழவினை யாது என்று ஆராயப்படுதலின், 'நினைக்கப்படும்' என்றார். "இம்மைச் செய்தன் யானறி நல்வினை, உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்தித், திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது" (சிலப்பதிகாரம், அடைக்கலக்காதை,வரிகள்: 91-93)என நினைக்கப்பட்டவாறு அறிக.

பதில் சொல்ல முடியாத கேள்வி என்பதால் தான் முன்வினைப் பயன், பூர்வ ஜன்ம கர்மா, விதிப் பயன் என்ற பதில்கள் மேலெழும்பின.

விவாதிப்போம், அடுத்த பதிவுகளில் - ஆண்டவன் அருளோடு