வெள்ளி, 18 ஜூலை, 2014

படித்ததில் பிடித்தது

என்னை மதவாதி என்றே பல நண்பர்கள் நினைப்பது உண்டு. உண்மையில் நான் ஒரு தாமதவாதி. ஏறத்தாழ பதினெட்டு மாதங்களுக்கு முன்னால் படித்த புத்தகம் இது. புத்தக வெளியீட்டு விழாவில்  கலந்து கொண்டு  அன்று இரவே படித்த புத்தகம் இது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இணையத்தில்  இயங்கிக் கொண்டு இருப்பவர் நண்பர் திருப்பூர் ஜோதிஜி அவர்கள். ஒரு பட்டதாரியாக திருப்பூரில் காலடி எடுத்து வைத்தது, இன்று பெரிய நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராக வளர்ச்சி அடைந்த அவரது வாழ்க்கையையும், அத்தோடு திருப்பூர் நகரம் கடந்த இருபது ஆண்டுகளில் கண்ட வளர்ச்சியையும், அந்த வளர்ச்சிக்கு அது தந்த விலையையும் இணைத்து எழுதிய புத்தகம் டாலர் நகரம்.

புத்தக விமர்சனமாக இல்லாமல், இந்தப் புத்தகத்தில் நான் கண்டு கொண்ட மேலாண்மைப் பாடங்களையும், வாழ்க்கைப் பாடங்களையும் இங்கே தொகுத்து உள்ளேன்.

இனி வருபவை நண்பர் ஜோதிஜி அவர்களின் எண்ணங்கள்.

                 -------------------- --------------- ----------------------------

காலம் சில நாடகங்களை நடத்தும். முடிவில் சில பாடங்கள் கிடைக்கும்.
கற்றுக் கொண்டவர்கள் கவனமாக முன்னேறி அடுத்த படியில் ஏறி விடுவர். 
ஒவ்வொரு சூழ்நிலையும் ஒவ்வொரு பாடத்தை நமக்கு வழங்கிக் கொண்டேதான் இருக்கிறது. 

பதவி என்பது பெரிய விஷயம் இல்லை. ஆனால் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். திறமை என்பது முக்கியமில்லை. தந்திரமும் சமயோஜிதமும் தான் முக்கியமாகத் தேவைப் படுகிறது. எதை எங்கே பேசவேண்டும் ? எப்படிச் சூழ்நிலையைச் சமாளிக்கவேண்டும், முதுகுக்குப் பின் நடக்கும் துரோகங்களை எப்படி இனம் காண வேண்டும் என்பதே முக்கியமாக ஆகி விட்டது. 

அனுபவக் கல்வியே பல பேருக்கு நல்ல பொருளாதார வாழ்கையை அறிமுகம் செய்து தருகிறது. பணம் சேர்த்த பலர் மெத்தப் படித்தவர்களும் அல்ல, எந்த மேலாண்மைப் பள்ளிகளில் கற்றவர்களும் அல்ல. தொடர்ச்சியான உழைப்பு, சாமர்த்தியமான திட்டங்கள், உறக்கம் மறந்த செயல்பாடுகள்,  தொழிலுக்காகவே தங்களை அர்ப்பணித்த வாழ்க்கை. இந்த குணாதியங்கள் தான் பலரைத் தொழில் அதிபர்களாக வளர்த்து உள்ளது. நாம் வெற்றியாளனா இல்லை வெற்றி பெற்றவர்களைப் பார்த்து புழுங்கிக் கொண்டு இருப்பவனா ? இரண்டே கேள்விகள் தான் இங்கு. 

வெற்றி என்பது உழைப்பின் மூலமே வருவது என்பதைப் பலர் வாழ்கையின் மூலம் நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். பல நிஜ வாழ்க்கைச் சூத்திரங்களையும் இவர்கள் வாழ்கையின் மூலம் நம்மால் கற்றுக் கொள்ள முடியும். எதைச் செய்யவேண்டும், எப்போது செய்யவேண்டும், எப்படிச் செய்யவேண்டும் - இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் தெரிந்தால் வெற்றி உறுதி.

எது  நம்மால் முடியாது என்று தெரிகிறதோ, அதில் நுழையாமல் இருந்தாலே நம்முடைய தொழிலில் வெற்றி உறுதி ஆகிவிடும்.

வெற்றி பெற்ற நிறுவனங்கள் அனைத்தும் தெளிவான நிர்வாக வடிவமைப்பில் உருவாக்கப் பட்டு இருக்கும். ஒவ்வொரு நிறுவனங்களிலும் மேல்மட்டம் முதல் அடிப்படைத் தொழிலாளர்கள் வரை குறிப்பிடத்தக்க நிர்வாக ஒழுங்கு இருக்கும்.

 இது போன்ற நிறுவங்கள், பணிபுரிபவர்களின் அனுபவத்திற்கும் கல்வித் தகுதிக்கும் மதிப்பளிக்கும்.அரைகுறையான ஞானம் பெற்றவர்கள் இங்கே ஜல்லி அடிக்க முடியாது. இது போன்ற நிறுவனங்கள் உள்ளூர் விற்பனை முதல் உலகளாவிய வியாபாரம் வரை, சரியான திட்டமிடுதலுடன் வணிகம் செய்து கொண்டு இருப்பார்கள். 

அறிவுரை என்பதே இரண்டு பக்க ஆயுதம் போலத் தான். சில சமயம் தரித்துக் கொண்டவனையே அது தாக்கி விடும். பல நேரங்களில் பலரைத் திருத்தும் அவசியம் நமக்கில்லை. திருந்தும் நிலையிலும் பலர் இருப்பது இல்லை. 

உழைப்பவர்களிடம் சுய கௌரவம் இயல்பான ஓன்று. 

வாழ்க்கை எப்போதும் போல உருளும் வரையில் இயல்பாக உருண்டு கொண்டே இருக்கும். பிரச்னை தொடங்கி விட்டால் நம்மையும் உருட்டித் தள்ளி விடும், 

மனிதனின் மனமென்பது அடுத்த போராட்டதிற்கு தயாராக இருக்கும்போது, அவர்கள் உடல் எதையும் ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் படைத்ததாக ஆகி விடுகிறது. நாம் வாழ வேண்டிய வாழ்க்கையை அதன் போக்கிலேயே பழகிவிட்டால் கட்டாந்தரை கூட பஞ்சு மெத்தை போலவே மாறிவிடும்.

அடித்தட்டு வர்க்கமோ, நடுத்தர வர்க்கமோ எவராக இருந்தாலும் தங்களை நம்பி  வாழ்பவர்களுக்காகவே தங்களின் வாழ்கையை வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறார்கள்.

அளவான வருமானம் அமையப் பெற்ற அத்தனை பேர்களும், ஆயுள் முழுக்க ஒருவிதமான அடிமைகள் தான்.

எத்தனை காரணங்கள் தத்துவங்கள் சொன்னாலும், இந்த வாழ்க்கை என்பதை மனைவிக்காக, மகனுக்காக, மகளுக்காக, பெற்றோருக்காக என்று ஒவ்வொருவரும் வாழ்ந்துதான் தொலைக்க வேண்டி இருக்கிறது.

நல்லவர்கள் போல வேஷம் போட்ட தலைவர்கள் நாட்டை ஆள, வேஷம் போட்டவர்கள், தத்துவம் பேச மௌன சாட்சியாய் நாம் அனைத்தையும் கடந்துதான் செல்ல வேண்டி இருக்கிறது.

உண்ண இலவசம், உடுக்க இலவசம், உறங்க இலவசம் என்று சொல்லி வருபவர்கள் கல்லூரிப் படிப்பு வரை இலவசம் என்று சொல்லவே மாட்டார்கள். இந்திய சரித்திரத்தில் மதுவை ஊற்றிக் கொடுப்பவர்களைக் காவல் காக்கும் பெருமை நம் தலைவர்களுக்தான் சேரும். காரணம் சரியான முறையில் யோசிக்கக் கற்றுக் கொண்டால், சரியான முறையில் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்பதைப் புரியாதவர்களா இவர்கள். 

ஒவ்வொரு தொழில் நகரத்திற்கும் வெவ்வேறு முகமுண்டு. பணம் அதிகமாகப் புழங்கும் நகரங்களில் மனித மனதைத் தேடுவது அறியாமை. 

இரண்டு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் என்பதில் மனிதாபிமானம் என்பது தேடிப் பார்த்தாலும்  கிடைக்காது என்பது போல, தொழிலிலும் அதுவே நடக்கிறது. ஒருவர் வெற்றி பெற்ற பிறகு எத்தனை கதைகள் கட்டுரைகள் வேண்டும் என்றாலும் சொல்லலாம் / எழுதலாம். பலர் நடந்து வந்த பாதையைப் பார்த்தல் அதெல்லாம் ராஜதந்திரம் என்பதற்குள் முடிந்து விடும். பணம் என்பது விரும்புவர்களை விட வெறியாக உள்ளவர்களிடம் தான் வந்து சேரும்.

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையைச் சரியான முறையில் வாழத் தெரியாவிட்டால், ஒரு தலைமுறைக்குத்தான் பிரச்னை. ஒரு நிறுவனம் சரியான முறையில் இயங்காவிட்டால்  சமுதாயத்தின் பிரச்சனையாக மாறி விடுகிறது. 

இந்தியா என்ற மரத்தில் ஏறி நின்று கொண்டு   கிளைகளைச் சிலர் வெட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.பலர் மரத்தின் வேர்ப் பகுதியில் சுடுதண்ணீர் ஊற்றிக் கொண்டு இருக்கிறார்கள். கட்டளைகளைப் பிறப்பிப்பது எல்லோரும் ஆக்ஸ்போர்ட், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக மேதைகள்.

ஏற்றுமதி செய்தால் அன்னியச் செலவாணி இருப்பு அதிகரிக்கும் என்பது போல, உள்நாட்டில் வேலைவாய்ப்பு குறைந்தால் அதனால் பலர் குற்றங்களில் ஈடுபடுவர் என்பது எப்போது இந்த மேதைகளுக்குப் புரியும் ? 

நம் தலைவர்கள் மக்களுக்காக என்று புதிதாக எந்தத் திட்டங்களையும் இங்கு கொண்டு வரத் தேவை இல்லை. இந்தியாவின் உள்ள இருக்கும் அடிப்படை வளத்தை இவர்களின் சுயலாபதிற்க்காக ஏற்றுமதி செய்யாமல் இருந்தாலே போதும். இயல்பாகவே இந்தியா வல்லரசு ஆகி விடும். 

மேலை நாட்டினர் இந்திய அரசியல்வாதிகளின் மரபணுக்களை ஆராய்ச்சி செய்து பார்க்கலாம். எந்த மூலக் கூற்றில் பணவெறி இருக்கிறதோ அதை மட்டுமாவது நீக்க முடியுமா என்று பார்க்கலாம்.

உலகத்தில் அமேரிக்காவால் பாதிக்கப் படாத நாடே இல்லை. அப்படி ஒரு நாடு இருக்குமானால் அந்த நாட்டில் அமெரிக்காவிற்குத் தேவைப்படும் எந்த அடிப்படை வளமும் இல்லை என்று அர்த்தம். 

அப்பனும் பாட்டனும் கற்றுக் கொடுத்த இயற்க்கை விவசாய உணவு முறையை இன்று வெளிநாட்டுக்காரன் நமக்குக் கற்றுக் கொடுக்கிறான். நாமும் அவர்கள் விரும்பும் இயற்கை உரத்தைப் போட்டு உருவாக்கப் பட்ட பொருள்கள் என்று அவர்கள் விருப்பப்படி நடந்து கொண்டு ஏற்றுமதி செய்யவேண்டிய நிலையில் இருக்கிறோம். 

வளர்ந்து கொண்டு இருக்கும் நாடுகளில் வாழ்பவர்களின் வாழ்க்கை முழுவதும் உரமாக மாறிவிட, வளர்ந்த நாடுகள் விளைச்சலை அட்டகாசமாக அறுவடை செய்து கொண்டு இருக்கிறார்கள். 

அமெரிக்காவின் சர்வதேச அரசியல் கொள்கைகளும் அங்குல தொழில் அதிபர்களின் கொள்கைகளும் வெவ்வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. பன்னாட்டு நிறுவனங்கள் அடிப்பது ஒரு கல்லில் இரண்டு மாங்காய் இல்லை, ஒரு மரமே சாய்ந்து விடும். 

இங்கே  குழந்தைகளின்  ஒழுக்கம் பற்றி யாருமே பேசுவது இல்லை. தலை இல்லாத முண்டமாகத்தான் நமது குழந்தைகளை வளர்க்கப் போகிறோமா ? நமது குடும்பச் சூழ்நிலைகள் அவர்களுக்குப் புரிய வைத்து இருக்கிறோமா ? அவர்களின் விருப்பு வெறுப்புக்களை நாம் புரிந்து வைத்துக் கொண்டு இருக்கிறோமா ?

இதனைப் போட்டி நிரம்பிய உலகத்தில் ஒழுக்கமாக வளர்ந்த பிள்ளைகள் மட்டுமே நம் அருகே  இருந்து கவனிக்க முயற்சி செய்வார்கள். இல்லையென்றால் வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளை கணினி மூலம் மட்டுமே கண்டு  கொள்ள முடியும்.

 பணம் முக்கியம், பணத்தைச் சம்பாதிக்க படிப்பு முக்கியம், போட்டியில் முந்திவர மொழி அறிவு மிக முக்கியம். இதை  எல்லாவற்றையும் விட சுப்பையாவின் மகனாக, முனியாண்டியின் மகளாக அவரவரின் குடும்பப் பாரம்பரிய பெருமையும் முக்கியம் அல்லவா ? நம் நாட்டிக்கு விசுவாசமான ஒரு நல்ல குடிமகனாக அவர்களை வளர்க்க வேண்டாமா ?

                   -------------------  ----------------------  ---------------------

ஜோதிஜி அவர்களின் எண்ணங்களில் என்னைக் கவர்ந்தவை இவை. உங்களுக்கும் பிடித்து இருக்கும் என நம்புகிறேன்