திங்கள், 12 மே, 2025

மே 12 - நாகஸ்வர இசைக்கலைஞர் ஷேக் சின்ன மௌலானா

எந்த நல்ல நிகழ்ச்சி என்றாலும் இசைக்கப்படும் மங்கள வாத்தியம் நாகஸ்வரம். நல்ல உடல்வலுவும், தேர்ந்த மூச்சுப்பயிற்சியும் உடையவர்களால் மட்டுமே இந்த வாத்தியத்தைக் கையாளமுடியும். அப்படியான சவாலான வாத்தியத்தில் இருந்து அற்புதமான இசையை அளித்த கலைஞர் ஷேக் சின்ன மௌலானா அவர்களின் பிறந்ததினம் இன்று. 



பாரம்பரியமான ஒரு இசைக்குடும்பத்தில் 1924ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் நாள் பிறந்தவர் மௌலானா ஸாஹிப். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கரவடி என்ற சிற்றூர்தான் இவரது பூர்வீகம். தொடக்கத்தில் தனது தந்தையிடம் நாகஸ்வரம் பயின்ற ஷேக் பின்னர் நாச்சியார்கோவிலைச் சார்ந்த ராஜம் - துரைக்கண்ணு சகோதர்களிடம் தனது பயிற்சியைத் தொடர்ந்தார். பிரபல நாகஸ்வரக் கலைஞர் திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களை தனது மானசீகக் குருவாகக் கொண்டு தஞ்சாவூர் பாணி என்ற முறையில் விற்பன்னராக விளங்கினார். 

தமிழ், தெலுங்கு, சமிஸ்க்ரிதம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்த ஷேக் ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்களையும் கற்றிருந்தார். இவரது சகோதருக்கும் மௌலானா என்பதுதான் பெயர். எனவே இவரை சின்ன மௌலானா என்று மக்கள் அழைக்கத் தொடங்கினார்கள். ஷேக் என்பது மரியாதைக்குரியவர்களே அழைக்கும் சொல். இரண்டும் சேர்ந்து இவர் ஷேக் சின்ன மௌலானா என்று இசை உலகத்தில் அறியப்பட்டார். 

ரெங்கநாத ஸ்வாமியின்மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த ஷேக், ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்தார். ஸ்ரீரங்கம் கோவிலிலும் சிருங்கேரி சாரதா பீடத்திலும் இவர் ஆஸ்தான இசைக்கலைஞராக இருந்தார். ஸ்ரீரங்கத்தில் சாரதா நாகஸ்வர சங்கீத ஆஸ்ரமம் என்ற அமைப்பை நிறுவி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். திருவையாறு ராஜா இசைக்கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 

25-வது சுதந்திர தின கொண்டாட்டம், 50-வது சுதந்திர தின கொண்டாட்டம் உட்பட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் இவர் வாசிப்பு இடம்பெற்றது. இலங்கை, அமெரிக்கா, கனடா, ஹாங்காங், ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ், பின்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

மங்கல வாத்ய விசாரதா, கலைமாமணி, பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாதமி விருதுகந்தர்வ கலாநிதி, நாதஸ்வர கலா பிரவீணா, அகில பாரத நாதஸ்வர ஏக சக்ராதிபதி, சங்கீத கலாநிதி, இசைப் பேரறிஞர் உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பரிசுகள், பட்டங்களைப் பெற்றுள்ளார்.

இறுதிவரை நாதஸ்வர இசைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கி வந்த ஷேக் சின்ன மவுலானா 1999-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 75-வது வயதில் மறைந்தார்.

கலைஞர்கள் மறைந்தாலும் அவர்களின் கலையால் ரசிகர்களின் உள்ளத்தில் இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்.

ஞாயிறு, 11 மே, 2025

மே 11 - தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி

அறியாமை இருள் மனிதகுலத்தைச் சூழும்போதெல்லாம் உலக ஆசான் ஒருவர் தோன்றி உலகை வழிநடத்துவார் என்பது அநேகமாக இறைநம்பிக்கை உடைய அனைவருக்கும் பொதுவான நம்பிக்கை. அதுபோன்ற ஒரு உலக குரு ஒருவரைத்தான் தியாசபிக்கல் சொசைட்டி என்ற ப்ரம்மஞானசபையினரும் தேடிக்கொண்டு இருந்தார்கள். அவ்வாறு அவர்களால் கண்டறியப்பட்ட உலக குருதான் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.


ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் 1895-ல், ஒரு தாசில்தாரின் எட்டாவது குழந்தையாகப் பிறந்தார் ‘ஜிட்டு’ கிருஷ்ணமூர்த்தி. அவரது பத்தாவது வயதில் தாயார் மரணம் அடையவே, தந்தை நாராயணய்யா சென்னைக்குக் குடி பெயர்ந்து,அடையாறில் அப்போது அன்னிபெசன்ட் அம்மையாரின் தலைமயில் இயங்கி வந்த பிரம்ம ஞான சபையில் வேலைக்குச் சேர்ந்தார். கிருஷ்ணமூர்த்தியும் அவரது தம்பி நித்யாவும் சபைக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு ஆங்கிலேய முறைப்படி கல்வியும், பல்வேறு நாடுகளில் சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. குண்டலினி யோக முறையைக் கற்றுத் தேர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி.

1925-ம் ஆண்டு தம்பி நித்யாவின் மரணம், கிருஷ்ணமூர்த்திக்கு முழுமையான விழிப்பு உணர்வைக் கொடுத்தது. ‘ நெருங்கியவரின் மரணத்தின்போது நாம் கண்ணீர் வடிப்பது, உண்மையில் இறந்தவருக்காக அல்ல; நாம் முன்பு போல் வலிமையாக இயங்க முடியாது, அவர் மூலம் நமக்கு இனி சந்தோஷமோ, உதவிகளோ கிடைக்காது என்பதாலேயே அழுகிறோம்’ என்பதைக் கண்டுகொண்டார். 1929-ம் வருடம் ‘அனைத்துலக ஆசான்’ என்ற பட்டத்தையும், கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களையும் தூக்கி எறிந்த கிருஷ்ண மூர்த்தி, ‘‘நான் யாருக்கும் குருவாக இருக்க விரும்பவில்லை. எந்த அமைப்பிலும் கட்டுப்படாமல் சுதந்திரமாக இருந்தால்தான், மக்களுக்குச் சுதந்திரம் பற்றி என்னால் விளக்கிச் சொல்ல முடியும்’’ என்றார்.

பாரதம் உலகிற்கு அளித்த தத்துவ ஞானிகளில் பெரிதும் மாறுபட்டவர் ஜே கே. தொடர்ச்சியான சொற்பொழிவுகள் மூலம் அவர் அறியப்படலானார். ஒருபோதும் அவர் எந்த நூல்களையோ அல்லது அவருக்கு முந்தய குருமார்களையோ தனது பேச்சில் குறிப்பிட்டதே இல்லை. நூல்களோ குருமார்களையோ அவர்கள் கண்டடைந்த பாதையைச் சொல்லுவார்கள். ஆனால் உங்களுக்கான பாதையை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும், உங்கள் பயணத்தை நீங்களேதான் பயணிக்க வேண்டும். அதற்கு முழுமையான விழிப்புணர்வு உங்களுக்கு இருக்க வேண்டும். ஜேகேயின் அறிவுரையின் சாரம் இதுதான்.

கடவுள்கள், கோவில்கள், நூல்கள், சாதி, மத மொழி மற்றும் நாட்டோடு உங்களுக்கு உண்டான பற்று என்பது மனித ஒருமைப்பாட்டுக்கு  எதிரானது. மனிதர்க்கு தேவை மாற்றமல்ல, விழிப்புணர்வே என்று உலகம் முழுவதும் சுற்றி வந்து மக்களிடம் அவர் கூறினார். தனது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ தன்னை வழிபடுங்கள், உங்களை நான் கடையேற்றுகிறேன் என்றோ அவர் சொன்னதே இல்லை. யோசியுங்கள், விவாதியுங்கள், விழிப்புணர்வோடு வாழ்க்கையை நடத்துங்கள் என்றுதான் அவர் கூறினார்.

கேள்வி, கேள்விக்கு மேல் அடுத்த கேள்வி இதுதான் ஜேகேயின் உரையாடலின் பாணி. உதாரணமாக கோபம் ஏன் வருகிறது?' என்று அவரிடம் கேள்வி கேட்டால், 'கோபம் என்பது என்ன?' என்று நம்மிடம் திருப்பிக் கேட்பார். கோபம் எங்கிருந்து வருகிறது? அது தொடங்கும் இடம் எது? முடியும் இடம் எது? அதனால் வரும் விளைவுகள் என்ன? இதுபோன்ற எதிர்க் கேள்விகளுடன் உரையாடத் தொடங்குவார். அந்த உரையாடலின் முடிவில் கேள்விக்கான பதில், கேள்வி கேட்டவருக்குக் கிடைக்கும். இதுதான் ஜே.கே. என்கிற ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் தத்துவ பலம்.

எந்தத் தத்துவத்தையும் உருவாக்காமல், 20ஆம் நூற்றாண்டின் தத்துவ ஞானிகளில் ஒருவராக அவர் மதிக்கப்படக் காரணம் வாழ்க்கை பற்றியும் அதன் பொருள் பற்றியும் பேசியதுதான். இவரது சிந்தனைகள் நூல்களிலும் ஒலிப் பேழைகளிலும் கிடைக்கின்றன. அதன் மூலம் வாழ்க்கை பற்றிய தேடலின் உண்மைத்தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.

“சந்தோஷமாக இருப்பதற்கு, நமக்கு மதங்கள் வேண்டுமா? அன்பாக இருப்பதற்கு, நாம் கோவில்களை நிறுவ வேண்டுமா? கோவில்களின் இருண்ட கருவறையிலோ, பெரிய அமைப்புக்களின் வெளிச்சமிக்க அரங்குகளிலோ சத்தியத்தை கண்டறிய முடியாது. புத்தகங்களிலிருந்தோ சடங்குகளிலிருந்தோ சத்தியத்தை கண்டறிய முடியாது. கடற்கரைக்கு சென்று பாருங்கள். அங்கு, வீசுகின்ற காற்றில் அலைகள் ஒன்றுக்கொன்று முட்டிமோதிக் கொள்கின்றன. அவ்வழகு அனைத்தையும் ஒரு குறுகிய கோவிலுக்குள் சேர்த்து கட்டிவைக்க விரும்புகிறீர்களா? உங்கள் மனதையோ இதயத்தையோ எதனாலும், எவராலும் எல்லைக்குட்படுத்த அனுமதிக்காதீர்கள். அப்படி அனுமதித்தால், நீங்கள் மற்றொரு மதத்தையோ, மற்றொரு கோவிலையோ நிறுவுவீர்கள். நீங்கள் சிறிய தெய்வங்களை உருவாக்கி, அதனை சிறிய கோவில்களில் வைத்து வணங்குதலாகாது. சூரியனே நமக்கிருக்கும்போது, யார் ஒரு மெழுகுவர்த்தியின் ஒளியை வணங்குவர்?” இப்படியான கேள்விகளோடு இணைந்த பேச்சு அனைவரையும் அதிரவைத்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

இளமைப்பருவத்திலேயே வியக்கத்தக்க வகையில் புகழடைந்த கிருஷ்ணமூர்த்தி, துக்கத்திலிருந்து மீட்பவர் என்றும், உலக ஆசான் (World Teacher) என்றும், புத்தர் என்றும், ஏசு கிருஸ்து என்றும், இன்னும் பலவாறாகவும் போற்றப்பட்டார். அவர் ஒரு சிறந்த ஞானி, தத்துவமேதை, சிறந்த சொற்பொழிவாளர், இலக்கிய கர்த்தா, கவிஞர், கல்வியாளர், ஆன்மீகத்தில் தனித்து பயணித்த யாத்ரீகர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் பயணித்து, பிற ஒளியை நாடாமல், தானே தனக்கு ஒளியாக திகழ வேண்டியதின் அவசியத்தை, தன் உரையைக் கேட்க வருபவர்களுக்கு சுட்டிக் காட்டி வலியுறுத்தி வந்தார்.

காலத்தாலோ சூழ்நிலைகளாலோ தேய்ந்துவிடாமல், அப்பணியின் வேகம் மற்றும் தீவிரத்தன்மையானது குறையாமல் நீடித்தது. சொல்லப்போனால், கிருஷ்ணமூர்த்தியின் வயது கூடிக்கொண்டுப்போகையில், அப்பணியில் புதிய சக்தியாற்றலும் வேகமும் அதிகரித்து வெளிப்பட்டது. ‘சொற்பொழிவாற்றுவதை நிறுத்திவிட்டால், தனது உடல் மடியும், உடலின் ஒரே நோக்கம் போதனைகளை வெளிப்படுத்துவதே’ என்று தனது இறுதி காலத்தில் கிருஷ்ணமூர்த்தி கூறியதுண்டு.

சென்னையில் ஆற்றிய கடைசி சொற்பொழிவிற்கு ஆறு வாரங்களுக்குப் பிறகு, தனது 91-ஆம் (17.02.1986) வயதில் ஓஹாயில் கிருஷ்ணமூர்த்தி அமரரானார்.

இறுதி நாட்கள் வரையிலும், உலகின் பற்பல நாடுகளுக்கும் நகரங்களுக்கும் பயணித்து சொற்பொழிவுகள் செய்து வந்தார். மும்முரமான நிகழ்ச்சி நிரலாக இருந்த அவர் பயணங்களில், பொது கூட்டங்களில் பேசினார்; நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் நடத்தினார். அவரின் வாழ்வியல் சிந்தனைகளை கைப்பட எழுதி வைத்தார். துக்கத்தை சுமந்துகொண்டு தன்னை நாடி வரும் ஆண்களோடும் பெண்களோடும் ஆறுதலாக மௌனத்தில் அமர்ந்திருக்கவும் செய்தார். படிப்பறிவின் அடிப்படையில் பிறந்ததல்ல அவரின் போதனைகள். வாழ்வைப் பற்றிய அவரின் உள்ளார்ந்த உணர்வில், அக நோக்கில் மலர்ந்தவை அவை.

ஜே.கே வைப் புரிந்துகொள்ளவும், பின்பற்றி நடக்கவும் மிகக் கடினமானவர் என விமர்சனங்கள் உண்டு. ஆனால், ‘மனிதருக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!’ என்ற அவரது மந்திரச் சொல்லுக்கு இன்றுவரை மாற்றுக் கருத்து இல்லை.  

சனி, 10 மே, 2025

மே 10 - ராணுவத் தளபதி ஜெனரல் V K சிங்

பாரத ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் தற்போதைய பாஜக மந்திரிசபையின் முக்கியமான அங்கமாகவும் விளங்கும் ஜெனரல் விஜய் குமார் சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று.


ஹரியானா மாநிலத்தைச் சார்ந்த ஜெனரல் வி கே சிங் பாரம்பரியமான ராணுவக் குடும்பத்தைச் சார்ந்தவர். அவர் தந்தையும், தாத்தாவும் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். ராஜஸ்தான் மாநில பிலானி நகரில் உள்ள பிர்லா பள்ளியில் படித்த வி கே சிங் பின்னர் பூனா நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு பள்ளியில் பயின்றார். 1970 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் ராஜ்புத் பிரிவில் பணியாற்றத் தொடங்கிய சிங், பாரத ராணுவக் கல்லூரியிலும் அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள ராணுவக் கல்லூரியிலும் மேல்படிப்பு படித்தார்.

படிப்படியாக ராணுவசேவையில் முன்னேறிய சிங்,  பாரத ராணுவத்தின் கிழக்கு பிரிவின் தலைவராகப் பணியாற்றினார். 2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள் பாரத ராணுவத்தின் 24ஆவது தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இரண்டு ஆண்டுகள் அவர் இந்தப் பொறுப்பில் இருந்தார்.

ராணுவசேவையில் இருந்து ஓய்வுபெற்ற திரு சிங் ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டார். பின்னர் பாஜகவில் இணைந்து 2014ஆம் ஆண்டு காசியாபாத் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு அமைக்கப்பட்ட பாஜகவின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறையின் இணை அமைச்சராகவும், வடகிழக்கு மாநில வளர்ச்சிக்கான அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

அந்தக் காலகட்டத்தில் தெற்கு சூடானிலும், ஏமன் நாட்டிலும் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு நடுவில் அந்த நாடுகளில் வேலை நிமித்தம் வசித்துவந்த இந்தியர்களை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரும் சவாலான பொறுப்பை ஜெனரல் சிங் முன்னிருந்து வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். டெல்லியில் இருந்து மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருக்காமல், ஜெனரல் சிங் ராணுவத் தளபதி போல கொந்தளிப்பான இடங்களில் நேராகச் சென்று அங்கிருந்து மீட்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கி வழிகாட்டினார்.

2019ஆம் ஆண்டும் காசியாபாத் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெனரல் சிங், தற்போதைய மந்திரிசபையில் நெடுஞ்சாலைத்துறையின் இணை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.

ஜெனரல் வி கே சிங் அவர்களுக்கு ஒரே இந்தியா செய்தித்தளம் மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.  

வெள்ளி, 9 மே, 2025

மே 9 - மஹாராணா பிரதாப் பிறந்த நாள்


வரலாறு பதிவுசெய்யப்பட்ட காலத்தில் இருந்து பொதுயுகம் 1700 வரை பாரதம் உலகப் பொருளாதாரத்தில் 25% மேலான பங்கை வகித்து வந்தது. நீண்ட நெடிய நிலப்பரப்பும், வற்றாத நதிகளும், வளமையான நிலங்களும், உழைக்க அஞ்சாத மக்களும் என்று உலகத்தின் முக்கியமான நாடாக விளங்கியது. செல்வம் இருக்குமிடத்தை கொள்ளையடிக்க மற்றவர்கள் வருவது இயற்கைதானே. அப்படிதான் பல்வேறு நாடுகளிலில் இருந்து இந்தியாவின்மீது படையெடுக்க பலர் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருந்தனர். அலையலையாக வந்த ஆக்கிரமிப்பாளர்களை மீண்டும் மீண்டும் எதிர்த்து இந்தியர்கள் போரிட்டுக்கொண்டே இருந்தனர்.

தாயகம் காக்க தன்னலம் கருதாது தலைமையேற்ற மாவீரர்களில் மிக முக்கியமானவர். மஹாராணா பிரதாப்சிங் அவர்கள். இன்றய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மேவார் பகுதியை ஆண்ட சிசோடியா வம்சத்தின் வாரிசு ராணா பிரதாப். மேவார் நாட்டின் தலைநகரான சித்தூர் நகரை முகலாய மன்னர் அக்பர் தாக்கி கைப்பற்றினார். சித்தூரை கைவிட்டு ராஜா உதய்சிங் தனது தலைநகரை மாற்றிக்கொண்டார். அப்படி அவர் நிறுவிய நகர்தான் உதய்பூர்.

ராஜ உதய்சிங் மறைவிற்குப் பின்னர் மேவார் நாட்டின் மன்னராக மஹாராஜா பிரதாப்சிங் பதவி ஏற்றுக்கொண்டார். அநேகமாக எல்லா ராஜபுத்திர அரசர்களும் முகலாய மன்னர் அக்பரோடு நெருக்கமாகி, அவருக்கு கட்டுப்பட்டு நடக்க ஒத்துக்கொண்டனர். பலர் தங்கள் மகள்களை, சகோதரிகளை அவருக்கு திருமணமும் செய்து வைத்தனர். ஆனால் எந்த உடன்படிக்கைக்கும் வர மறுத்து எதிர்த்து நின்றவர் ராணா பிரதாப் மட்டுமே.

அக்பர் அனுப்பிய தூதுகள் எல்லாம் பயனற்றுப் போக, அக்பர் மஹாராஜா பிரதாப் மீது படையெடுக்க முடிவு செய்தார். மொகலயப் படைக்கு தலைமை ஏற்றவர் சக ராஜபுத்திர மன்னரான ராஜா மான்சிங். முகலாயப்படை ராணா பிரதாப்பின் படையைப் போல நான்கு பங்கு பெரியது. ஆனாலும் ராஜ்புத்திரர்களின் வீரம் என்று மீண்டு உறுதிசெய்யப்பட்டது. தனது பட்டத்து குதிரையான சேட்டக் மீது ஏறி ராணா பிரதாப் தனது படையை வழிநடத்தினார். குதிரைக்கு செயற்கையான தும்பிக்கையை மாட்டி மான்சிங்கின் யானையை குழப்பமடையச் செய்தார். மிக அருகில் இருந்து தனது ஈட்டியை மான்சிங் மீது ஏவினார். ஆனால் அந்த ஈட்டிக்கு இரையாகி மான்சிங்கின் யானைப்பாகன் மான்சிங்கை காப்பாற்றினார்.

போரில் காயமடைந்த மஹாராணா பிரதாப்பை அவரது குதிரை சேட்டக் பல மைல் தொலைவுக்கு சுமந்து சென்று காப்பாற்றி தனது உயிரை நாட்டுக்காக அர்ப்பணித்து. மேவார் நாட்டின் வளமையான கிழக்குப் பகுதி முகலாயர் வசமானது. மலையும் காடுகளுமான பகுதி மட்டும் ராணா ப்ரதாபின் ஆளுமைக்கு கீழ் இருந்தது.

அங்கிருந்து முகலாயர் மீதான தனது தாக்குதலைத் தொடங்கினார் ராணா பிரதாப். கொரில்லா போர் முறையை முழுமையாக இந்தியாவிற்கு அறிமுகம் செய்தவர் என்று ராணா பிரதாப் போற்றப்படுகிறார். கடைசி வரை ராணா பிரதாப்பை முகலாயர்களால் வெற்றிகொள்ளவோ அல்லது அவர்களின் ஆளுமையை ஏற்றுக்கொள்ளவோ வைக்கவே முடியவில்லை. சிறுது சிறிதாக இந்த உண்மையை முகலாயர்கள் ஏற்றுக்கொள்ள, தனது ராஜ்யத்தின் பல பகுதிகளை ராணா பிரதாப் மீட்டெடுத்தார்.
ஏழு அடி ஐந்து அங்குல உயரமும் நூறு கிலோவிற்கு அதிகமான எடையும் கொண்ட தோற்றம், தலைக்கவசம், கேடயம், ஈட்டி, வாள் என்று இருநூறு கிலோவிற்கும் அதிகமான ஆயுதங்களைத் தாங்கிய வீரன், சொந்த ராஜபுத்திர மன்னர்கள் எதிர்த்து நின்றபோதும் அடிபணிய மறுத்த மன்னன், பின்னாளில் சத்ரபதி சிவாஜி மஹராஜ் போன்றவர்களுக்கு முன்னோடியாக விளங்கிய இந்தியாவின் முதல் விடுதலை வீரன் மஹாராணா பிரதாப்சிங்கின் வாழ்க்கை நம் அனைவருக்கும் லட்சியப் பாதையில் செல்ல உதாரணமாக இருக்கட்டும்.

மே 9 - காந்தியின் குரு கோபால கிருஷ்ண கோகுலே பிறந்ததினம்

பாரதநாட்டின் சுதந்திரப் போராட்டம் என்பது ஆயுதம் தாங்கிப் போராடிய வீரர்களாலும், ஆங்கிலச் சட்டத்தின் துணையோடு ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரர்களாலும் ஒரே நேரத்தில் நடைபெற்ற ஒன்றாகும். அந்த வீரர்கள் தீவிரவாதிகள் என்றும் மிதவாதிகள் என்றும் அறியப்பட்டனர். ஏற்றுக்கொண்ட பாதை வேறாக இருந்தாலும் அவர்களின் தியாகம் என்பது சமமானதுதான். மிதவாதிகளின் முன்னோடியாக அறியப்பட்ட கோபாலகிருஷ்ண கோகுலே அவர்களின்பிறந்ததினம் இன்று.


மஹாராஷ்டிர மாநிலத்தின் ரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு சாதாரண சித்பவன் ப்ராமண குடும்பத்தில் கிருஷ்ணாராவ் கோகுலே - சத்தியபாமாபாய் தம்பதியரின் மகனாக 1866 ஆம் ஆண்டு மே 9 ஆம் நாள் பிறந்தவர் கோபாலகிருஷ்ண கோகுலே அவர்கள். பொருளாதார வசதி இல்லாமல் இருந்தாலும் அவர் குடும்பம் கல்வியின் முக்கியத்தை அறிந்தே இருந்தது. ஆங்கிலக் கல்வி அரசு இயந்திரத்தில் எங்காவது வேலைக்குச் சேர்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் குடும்பம் கோகுலேயின் கல்விக்கு உறுதுணையாக இருந்தது. கோல்காபூர் நகரின் ராஜாராம் கல்லூரியிலும் அதனைத் தொடர்ந்து மும்பையின் எலிபைன்ஸ்டோன் கல்லூரியிலும் கோகுலே கல்வி பயின்றார். ஆங்கிலக் கல்வி கோகுலேவிற்கு அரசியல் அறிவையும் சேர்த்தே அளித்தது. தனது படிப்பை முடித்த கோகுலே பூனா நகரில் உள்ள பார்கூசன் கல்லூரியில் கணிதப் பேராசிரிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.

மஹாதேவ கோவிந்த ராணடேயின் சீடராக கோகுலே காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தொடர்ச்சியான விவாதங்களின் மூலமாகவும், ஆங்கிலச் சட்டத்தின் மூலமாகவும் பாரதியர்களுக்கு அரசியலில் போதுமான பிரதிநிதித்துவம் பெறலாம் என்பது அவரின் கருத்தாக இருந்தது. அதே காலகட்டத்தில் அதே சித்பவன் ப்ராமண வகுப்பில் தோன்றிய திலகர் பூரண ஸ்வராஜ்யம் எங்கள் பிறப்புரிமை என்று முழங்கிக்கொண்டு இருந்தார். நேரடியான போராட்டங்களின் மூலம் ஆங்கில ஆட்சியை அகற்ற முடியும் என்று நம்பிய தேசபக்தர்கள் திலகரின் வழியைப் பின்பற்றினர். 1895ஆம் ஆண்டு கோகுலேவும் திலகரும் காங்கிரஸ் கட்சியின் துணைச்செயலாளர்களாகப் பணிபுரிந்தனர். அதனைத் தொடர்ந்து 1905ஆம் ஆண்டு கோகுலே காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியின் போக்கை மிதவாதிகளா அல்லது தீவிரவாதிகளா யார் நிர்ணயிப்பது என்ற கருத்து வேறுபாடு முற்றி 1907ஆம் ஆண்டு சூரத் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கட்சி இரண்டாகப் பிளவு பட்டது. 1908ஆம் ஆண்டு திலகர் கைது செய்யப்பட்டு பர்மாவில் உள்ள மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ காங்கிரஸ் கட்சி மிதவாதிகளின் கைகளுக்குச் சென்றது. கொள்கைரீதியாக வேறுபட்டு இருந்தாலும் தேசபக்தர்கள் ஒருவர்மீது ஒருவர் வைத்திருந்த மரியாதை குறையவே இல்லை என்பதுதான் உண்மை.

பாரத நாட்டின் மக்கள் அனைவர்க்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பது கோகுலேவின் விருப்பமாக இருந்தது. பாரத்தின் பொருளாதாரத்தை ஆய்வு செய்யவும், தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட பஞ்சங்கள் பற்றி ஆராயவும்  அமைக்கப்பட்ட வெல்பி கமிஷனிடம் தேவையற்ற பல செலவுகளை ஆங்கில அரசு செய்கிறது என்றும், போதுமான அளவு கல்விக்கு ஒதுக்கப்படவில்லை என்றும் கோகுலே வாதாடினார். குறைந்தபட்சம் நான்காம் வகுப்புவரையாவது கட்டாய இலவசக் கல்வி அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார்.

சிறந்த கல்வியை அளித்து தகுதியான தலைவர்களை உருவாக்க கோகுலே இந்தியாவின் பணியாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.  அன்றய ஆங்கில சட்டத்துக்கு உள்பட்டு சீர்திருத்தங்களைக் கொண்டுவருவது என்பதுதான் கோகுலேவின் வழிமுறையாக இருந்தது.  1899 முதல் பல்லாண்டுகள் மகாராஷ்டிர சட்டமன்றத்திற்கும், பின்னர் நாடாளுமன்றத்திற்கும் கோகுலே தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் நாட்டின் பட்ஜெட் பற்றிய அவரது விவாதங்கள் செறிவு மிகுந்ததாக இருந்தது.

காந்தி கோகுலேவைதான் தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டு இருந்தார். தென்னாபிரிக்காவில் இருந்து பாரதம் திரும்பிய காந்தியை நாடு முழுவதும் சுற்றி வந்து, நேரடியாக நாட்டின் நாட்டுமக்களின் நிலைமையை அறிந்து கொண்டு அரசியலில் ஈடுபடுமாறு கோகுலே அறிவுறுத்தினார். பளிங்கைப் போன்ற தூய்மை, சிங்கத்தைப் போன்ற துணிவு, அரசியல் வானில் குறையே சொல்லமுடியாத சரியான மனிதர் என்று காந்தி கோகுலேவைப் புகழ்ந்து எழுதினார்.

பாரத நாட்டின் புகழ்வாய்ந்த தலைவர்களில் ஒருவரான கோபால கிருஷ்ண கோகுலே தனது 48ஆம் வயதில் 1915ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாள் காலமானார்.

தேசியத் தலைவருக்கு ஒரே இந்தியா தளம் தனது அஞ்சலியை செலுத்துகிறது.  

வியாழன், 8 மே, 2025

மே 8 - பூஜ்ய குருதேவ் ஸ்வாமி சின்மயானந்தா அவதார தினம்


இருபதாம் நூற்றாண்டில் பாரதம் உலகிற்கு கொடையளித்த அத்வைத ஆசான் குருதேவ் ஸ்வாமி சின்மயானந்தா அவதாரத்தினம் இன்று.

கேரள மாநிலம் எர்ணாகுளம் நகரில் நீதிபதியாகப் பணியாற்றிக்கொண்டு இருந்த குட்டன் மேனன் என்பவருக்கும் பாருக்குட்டி அம்மாவிற்கும் மகனாகப் பிறந்தவர் ஸ்வாமிஜி. இவர் பூர்வாஸ்ரமப் பெயர் பாலகிருஷ்ணமேனன். தனது பட்டப்படிப்பை திருச்சூரில் முடித்த ஸ்வாமிஜி முது கலை மற்றும் சட்டப் படிப்பை லக்நோ பல்கலைக்கழகத்தில் பயின்றார். அது இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த நேரம். வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். அப்போது ஆங்கில அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை எழுதி, விநியோகித்து மக்களை போராடத் தூண்டியதாக பாலகிருஷ்ணமேனன் மீது அரசின் கைது நடவடிக்கை பிறப்பிக்கப்பட்டது.

கைதாவதில் இருந்து தப்பிக்க அவர் தலைமறைவானார். இரண்டாண்டுகள் தலைமறைவு வாழ்கை வாழ்ந்த மேனன், 1944ஆம் ஆண்டு பஞ்சாபில் கைது செய்யப்பட்டார். பலமாதங்கள் சிறையில் சுகாதாரமற்ற சூழலில் வாழவேண்டிய இருந்ததால் அவர் உடல்நிலை மோசமானது. வெள்ளையர் ஆட்சி அவரை அதிகாரபூர்வமாக விடுதலை செய்யாமல், ஊருக்கு வெளியே ஒரு சாலை ஓரத்தில் வீசிவிட்டு சென்றது. அங்கே ஒரு பெண்மணியால் கண்டெடுக்கப்பட்டு, மருத்துவ உதவி அளித்து அவர் காப்பாற்றப்பட்டார்.

அதன் பின்னர் ஜவஹர்லால் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது இடதுசாரி சிந்தனைகளை ஆதரித்து பல்வேறு கட்டுரைகளை எழுதினார். இந்திய மெய்ஞான ஆசிரியராக விளங்கிய ஸ்வாமிஜி, அந்தக் காலத்தில் இந்திய தத்துவத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லாமலும், காவி கட்டிய சந்யாசிகள் அனைவரும் சோம்பேறிகள் என்ற எண்ணத்தையே கொண்டிருந்தார் என்றால் நம்ப முடிகிறதா ?

இப்படிப்பட்ட சன்யாசிகளின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் என்று எண்ணி, அவர் இமயமலையில் உள்ள சாதுக்களை சந்திப்பதற்கு ரிஷிகேஷ் சென்றார். அங்கே ஸ்வாமி சிவானந்தாவை கண்டடைந்தார். நாத்திகவாதியாக சென்ற பாலன் சிவானந்தாவின் சீடராக ஒரு ஆன்மீக குருவாக, பற்றுகளைத் துறந்த சந்நியாசியாக மாறினார். 1949ஆம் ஆண்டு சிவராத்திரி நாள் அவர் சின்மயானந்தா என்ற யோகபட்டதோடு சந்நியாசி ஆக மாறினார். தபோவன் மஹராஜ் என்ற சன்யாசியிடம் வேதாந்த பாடத்தை குறைவற கற்றுக்கொண்டார்.

பாரதத்தாய் காலம்தோறும் தனது பெருமையை நிலைநாட்டும், தன் மக்களை வழிநடத்தும் தகுதியாக பிள்ளைகளை அளித்துக் கொண்டேதான் இருக்கிறாள். அப்படியா பெருமைமிகு மகனாக சுவாமி வேதாந்த பாடத்தை நாடெங்கும் நடத்த ஆரம்பித்தார். கீதைக்கு அவர் கூறும் விளக்கங்கள் கீதா ஞான யக்யம் என்ற பெயரில் பல இடங்களில் நடைபெற ஆரம்பித்தன. கூர்த்த மதியும், நீரொழுக்கு போன்ற ஆங்கில மொழி ஆளுமையும், உள்ளோடிய நகைச்சுவையும், இன்றய காலகட்டத்தின் சவால்களை எப்படி வேதாந்தத்தின் துணைகொண்டு எதிர்கொள்ளலாம் என்ற நடைமுறை சாத்தியக்கூறுகளும் என்று ஸ்வாமிஜியின் விரிவுரைக்கு மக்கள் பெருந்திரளாக வரத் தொடங்கினார்கள்.

நாடெங்கும் கீதை வகுப்புகள் ஆரம்பமாகின. அவை அனைத்தும் சின்மயா மிஷன் என்ற பெயரில் ஒருங்கிணைந்தன. 1956ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த கீதா ஞான யக்யத்தை அன்றய குடியரசுத்தலைவர் திரு ராஜேந்திர பிரசாத் துவக்கி வைத்தார். ஸ்வாமிஜியின் புகழ் இந்தியாவைத் தாண்டியும் பரவத் தொடங்கியது. உலகத்தின் பலநாடுகளுக்குச் சென்று அங்கேயெல்லாம் அத்வைத வேதாந்த அறிவை ஸ்வாமிஜி வழங்கினார். 

1975ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் சின்மயா மிஷன் தொடங்கப்பட்டது.
1963ஆம் ஆண்டு உலகெங்கிலும் உள்ள ஹிந்துகள் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றியும், அதனை சமாளிக்கும் வழிமுறை பற்றியும் விவாதித்து முடிவு செய்ய உலகளாவிய அமைப்பு ஓன்று தேவை என்று ஸ்வாமிஜி கருதினார். அதற்கான மாநாடு ஓன்று 1964ஆம் ஆண்டு அவரது சாந்தீபினி ஆஸ்ரமத்தில் கூட்டப்பட்டது. அதன் விளைவாக உருவானதுதான் விஸ்வ ஹிந்து பரீக்ஷித்.

சின்மயா மிஷின் சார்பாக இந்தியாவெங்கும் பல்வேறு இடங்களில் கல்விக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவை நடைபெறுகின்றன. சிறுவர் சிறுமியினருக்கான பாலவிஹார், இளைஞர்களுக்கான சின்மயா யுவ கேன்த்ரா, கீதை வகுப்புகள், வேதாந்த வகுப்புகள் என்று இந்திய தத்துவ மரபை அனைவருக்கும் அளிக்கும் பணி தொய்வில்லாமல் நடந்துகொண்டு இருக்கிறது.

பகவத்கீதை, பல்வேறு உபநிஷத்துக்கள் மற்றும் பல வேதாந்த நூல்களுக்கு ஸ்வாமிஜி உரை எழுதி உள்ளார், ஆங்கிலத்தில் உள்ள இந்த நூல்கள் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு, பலராலும் படிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு துறவிகள் சின்மயா மிஷன் மூலம் பயிற்றுவிற்கப்பட்டு உலகெங்கும் இந்தியாவின் ஞான பொக்கிஷத்தை பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். குருதேவ் தொடங்கிவைத்த ஞானஒளி உலகெங்கும் சுடர்விட்டுக்கொண்டு உள்ளது.

சுவாமிஜியின் வாழ்க்கை வெறும் பயணமல்ல, அது ஒரு தவம். சத்தியமே சின்மயமாக உருவெடுத்து வந்த விந்தை. 78 ஆண்டுகள் மெய் வருத்தம் பாராது, கண் துஞ்சாது தேசப் பற்றுடன் சமுதாய மேம்பாட்டுக்காகவும் அவர் செய்த பணிகள் மகத்தானது. தன்னைப் போல பலரை உருவாக்கிய அழிவற்ற விதை அவர்.

எத்தனையோ குருமார்கள் இந்த மண்ணில்
அவர் அனைவர்க்கும் எங்கள் வந்தனங்கள்.

புதன், 7 மே, 2025

மே 7 - குருதேவ் ரபீந்த்ரநாத் தாகூர் பிறந்தநாள்

தெளிவான கோடுகளால் நாடுகள் பிரிக்கப்படாத காலம் அது. பணம் சம்பாதிக்க ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் இருந்து பாரத நாட்டின் கொல்கத்தா நகருக்கு கிஸ்மிஸ், முந்திரி போன்ற உலர்பழங்களை விற்றுவந்த ரஹ்மான் என்ற சிறுவியாபாரிக்கும்   ஐந்து வயதேயான மினி என்ற சிறுபெண்ணுக்கும் இடையே உருவான பாசத்தைப் படம் பிடித்துக் காட்டும் கதை காபூலிவாலா. இரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தன் மகளின் கைத்தடத்தை தன் சட்டைப்பையிலும், மகளை மனதிலும் சுமந்து வாழும் ரஹ்மான்  மினியின் வடிவில் தன் மகளைப் பார்க்கும்  கதை இது. பொருள்தேடி குடும்பத்தைப் பிரிந்து இருக்கும் பலருக்கு தங்களையே காட்டும் கண்ணாடி அது. விஷ்வகவி என்றும் குருதேவ் என்றும் மரியாதையோடு அழைக்கப்படும் ரபீந்த்ரநாத் தாகூர் எழுதிய பல்வேறு படைப்புகளில் இதுவும் ஓன்று.


பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் பாரத நாட்டின் சிந்தனைப் போக்கை வங்காளமே முடிவு செய்தது. சிறந்த அறிஞர்கள், தத்துவ ஞானிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிவியல் மேதைகள், தேசியத் தலைவர்கள் என்று சாரிசாரியாக தொடர்ந்து வங்காளம் அளித்துக் கொண்டே இருந்தது. அந்த வரிசையில் ஒளிவிடும் மாணிக்கமாக விளங்குபவர் ரபீந்த்ரநாத் தாகூர். பாரதம், வங்கதேசம் என்று இரு நாடுகள் இவரின் கவிதையை தங்கள் தேசியகீதமாக அறிவித்துள்ளன. கவிஞர், சிறுகதை எழுத்தாளர், ஓவியர், இசைக்கலைஞர், ஆயுர்வேத மருத்துவ நிபுணர் என்று தாகூர் பல்துறை விற்பன்னராக விளங்கினார்.

தேபேந்திரநாத் தாகூர் சாரதா தேவி தம்பதியரின் மகனாக 1861ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் நாள் பிறந்தவர் ரபீந்த்ரநாத் தாகூர். மிகச் சிறுவயதிலேயே தாயாரை இழந்த ரபீந்த்ரநாத் தாகூர், உறவினர்களாலும், வேலையாள்களாலும் வளர்க்கப்பட்டார்.  கல்விக்கூடத்தில் சேர்ந்து முறையான கல்வியைப் பயிலாது, வீட்டிலேயே பல்வேறு ஆசிரியர்களால் தாகூர் கற்பிக்கப்பட்டார்.

பதின்மவயதில் தனது தந்தையோடு பாரதநாடு முழுவதும் சுற்றி அதன் மூலம் மிகச் சிறப்பான அனுபவங்களைப் பெற்ற தாகூர், சட்டம் படிக்க லண்டன் பயணமானார். ஆனால் சட்டத்தைக் காட்டிலும் இலக்கியம்தான் அவருக்கு நெருக்கமாக இருந்தது. ஷேக்ஸ்பியர் போன்ற ஆங்கில இலக்கியவாதிகளின் படைப்புகளை ஆழ்ந்து கற்றுக்கொண்டார். பட்டம் எதுவும் பெறாமலேயே அவர் பாரதம் திரும்பினார். ஆனால் லண்டன் வாழ்க்கை அவருக்கு பாரத கலையை மேற்கத்திய வடிவில் கூறும் திறமையை அளித்தது.

வங்காளத்தில் தங்கள் குடும்ப சொத்தான சாந்திநிகேதன் என்ற போல்பூர் நகரில் உள்ள பண்ணை ஒன்றுக்கு குடிபெயர்ந்த தாகூர், அங்கே அவர் விஸ்வபாரதி சர்வகலாசாலையை உருவாக்கினார். பல்வேறு சிறுகதைகள், பாடல்கள், புதினங்கள், பயண கட்டுரைகள் நாடகங்கள்  என்று அவற்றின் படைப்புலகம் பெருகிக்கொண்டே போனது. அது போக ஏறத்தாழ இரண்டாயிரத்திற்கும் மேலான பாடல்களையும் தாகூர் இயற்றி உள்ளார். அந்தப் பாடல்கள் ரபீந்த்ர சங்கீதம் என்று அழைக்கப்படுகிறது. தனது அறுபதாவது வயதில் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டு தாகூர் மிகச் சிறந்த ஓவியராகவும் புகழப் பெற்றார்.

தாகூரின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக ஆங்கில அரசு அவருக்கு சர் பட்டத்தை அளித்தது. ஆனால் ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தாகூர் அந்தப் பட்டத்தைத் துறந்தார். அன்றய தேசத்தலைவர்கள் பலரோடு தாகூருக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. காந்தியை முதல்முதலாக மஹாத்மா என்று அழைத்தது தாகூர்தான். ஆனால் பிஹாரில் ஏற்பட்ட பூகம்பம், மக்களின் பாவத்திற்கான தண்டனை என்று காந்தி கூறியதை தாகூர் மறுத்து எழுதினார். அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் போன்ற பல்வேறு அறிஞர்கள் தாகூரின் நெருங்கிய நண்பர்களாக  இருந்தனர்.

1905ஆம் ஆண்டு நடைபெற்ற வங்காளப் பிரிவினையை எதிர்த்து தாகூர் எழுதிய அமர் சோனா பங்களா என்ற பாடலை வங்காளதேசம் தங்கள் தேசியகீதமாக ஏற்றுக்கொண்டது. ஆனந்த சமரக்கூன் என்ற சிங்களக் கவிஞர் எழுதிய ஸ்ரீலங்காமாதா என்ற பாடல் சிங்கள நாட்டின் தேசிய கீதமாக உள்ளது. சமரக்கூன் விஸ்வபாரதி சர்வகலாசாலையில் தாகூரின் சீடராக இருந்தவர். இந்தப்பாடல் தாகூரின் பாடல்களை ஒட்டியே எழுதப்பட்டது.

பாரதநாட்டிலும் வங்காளதேசத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அருங்காட்சியகங்கள் தாகூரின் பெயரைச் சூடி உள்ளன. நீண்ட தாடி, ஒளிவிடும் கண்கள் என்று பார்க்கும் போது பண்டையகால ரிஷிகளில் ஒருவர் போலத் தோற்றமளிக்கும் தாகூர் மரியாதையாக குருதேவ் என்ற அடைமொழியோடுதான் அளிக்கப்படுகிறார். தேசங்களின் எல்லைக்கோடுகளைத் தாண்டி உலகையே ஒன்றாக எண்ணி நேசித்த அந்த மகாகவிஞர் மிகப் பொருத்தமாகத்தான் விஸ்வகவி என்றும் போற்றப்படுகிறார்.